நட்பட்டிமுனை “தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரி ஏற்பாடு செய்த புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸீர் கனி (ஹாமி) அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது அதில் பிரதம அதிதீயாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் ஆற்றிய உரை.
இன்று எங்கள் முன் நிற்கும் மிகப் பெரிய சவால் சிறந்த கல்வி தொடர்பானதே. நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எதிர்கால உலகம் முழுமையாக இணையத்தளத்துடன் இணைந்த ஒன்றாக மாறிவிட்டது. ஒரு கிணற்றுத் தளத்தில் உள்ள சிறிய ஜன்னல் போல, இன்று ஒரு ஸ்மார்ட் மொபைல் வழியாகவே உலகத்தைப் பார்க்கும் சமூகமாக நாம் மாறியுள்ளோம். இத்தகைய சூழலில், இந்தச் சமூகத்திற்கு எவ்வாறு கல்வி வழங்குவது, கல்வி அறிவை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதே எங்கள்முன் நிற்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது.
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தம் தற்போது முதலாம் வகுப்பிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு கல்வி சீர்திருத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், உரிய திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், கல்வி சீர்திருத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
1977 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதுபோல், 2025–2026 காலப்பகுதியில் திறந்த கல்வி (Open Education) என்ற கோட்பாட்டின் கீழ் கல்வி முன்னெடுக்கப்பட உள்ளது. மாணவர்கள், மாணவிகள் இணையத் தள ஜன்னல் வழியாக சுதந்திரமாக உலகத்தைப் பார்க்கும் சூழலில், அவர்களுக்கு எவ்வாறு கல்வி கற்பிப்பது என்பதில் உள்ள எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
எங்கள் பெற்றோருக்கு உள்ள மிகப் பெரிய அச்சம் என்னவென்றால், இணையம் வழியாக உலக அறிவைப் பெறும் போது, சரி–தவறு என்ற எல்லையைத் தாண்டி, தங்கள் பிள்ளைகள் தவறான பாதையில் சென்று விடுவார்களோ என்ற பயம்தான்.
இந்த விடயத்தை சட்டங்கள் மூலமாகவோ, அல்லது கல்வியை கட்டுப்படுத்துவதன் மூலமாகவோ அடைத்து வைக்க முடியாது. ஏனெனில் எதிர்கால சந்ததி நிச்சயமாக இணையம் மூலமாகத்தான் உலகத்தைப் பார்க்கப் போகிறது.
ஆகவே, இதற்கான ஒரே தீர்வு ஆன்மீகக் கல்வி. அந்த ஆன்மீகக் கல்வி, பொதுக் கல்வியுடன் சமாந்தரமாக, குறிப்பாக மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், எங்கள் சமூகத்தின் மத்தியில் செயல்படும் தாருல் ஹிக்மா என்ற இந்த நிறுவனத்தை நான் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸீர் கனி (ஹாமி) அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிறுவனம் நட்பட்டிமுனை போன்ற ஒரு சிறிய கிராமத்திலிருந்து உருவாக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமையைத் தருகிறது. மேலும், இது பெண்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருப்பதும் மிகவும் முக்கியமான ஒரு விடயமாக நான் கருதுகிறேன். ஏனெனில் எங்கள் சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அளவிட முடியாதது.
தாருல் ஹிக்மா என்பது, ஈஜிப்தில் தோன்றிய பாத்திமிய கலீபகால பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கல்வி மரபாகும். எங்கள் நாயகம் நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய புதல்வி பாத்திமா நாயகி அவர்களின் பெயரில் உருவான இந்த கல்வி மரபு, இன்று இந்தச் சிறிய நட்பட்டிமுனை கிராமத்திலும் வேரூன்றியிருப்பது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.
சிலர் கூறுகிறார்கள், நட்பட்டிமுனை போன்ற சிறிய கிராமத்திலிருந்து கிடைக்கக்கூடிய உச்ச அரசியல் அதிகாரம் என்பது வெறும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் அல்லது கல்முனை மாநகர சபை உறுப்பினர் பதவிதான் என்று. அதற்கு நான் ஒருபோதும் உடன்படவில்லை.
சமூகத்தில் அந்தஸ்தும் அரசியல் தலைமைத்துவமும் ஒருவர் எந்த ஊரில் பிறந்தார் என்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியதல்ல. எங்கள் நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்கா நகரத்தில் பிறந்தார்கள். ஆனால் அந்த மக்கா, அக்காலத்தில் பாரசீகம், சிரியா, இஸ்ரேல் போன்ற நாகரிக உச்சத்தில் இருந்த பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் அமைந்த, பாலைவனத்தில் உள்ள ஒரு சிறிய பிரதேசம்தான்.
அந்தச் சிறிய இடத்திலிருந்தே, இன்று உலகம் போற்றும் ஒரு நபியாகவும், ஒரு ரசூலாகவும், அவருடைய போதனைகளை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் ஒரு உலகம் உருவானது. அதற்குக் காரணம், அல்லாஹ் அவருக்கு “இக்ரஃ பிஸ்மி ரப்பிக” என்று வஹி மூலம் வழங்கிய அறிவையும் ஞானத்தையும் அவர் மனிதகுலத்திற்கு போதித்ததுதான்.
இன்று அல்லாஹ்வோ, நபிகளோ, ரசூல்களோ நேரடியாக வருவதில்லை. ஆசான்கள், உஸ்தாத்கள், ஆசிரியர்கள் மூலமாகத்தான் இந்த கல்வி எங்கள் மக்களிடம் வந்து சேர்கிறது. அந்த கல்வி, நட்பட்டிமுனையில் அமைந்துள்ள இந்த தாருல் ஹிக்மா மூலமாக எங்கள் சமூகத்திற்கு கிடைக்கும்போது, ஒருவர் பிறந்த இடம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், இந்த நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை அடைவதற்கு அது ஒருபோதும் தடையாக இருக்க முடியாது.
இன்ஜினியர், டாக்டர் மட்டுமல்ல ஒரு உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக மட்டுமல்ல மாகாண சபை உறுப்பினராக,பாராளுமன்ற உறுப்பினராக, ஏன் அமைச்சராகக் கூட இந்த கிராமத்திலிருந்து உருவாகுவதற்கு இந்த கல்வியே போதுமானது.